இந்திய வெளியுறவு கொள்கையை அழிக்கும் சர்க்கஸ்! ஜெய்சங்கரை விமர்சித்த ராகுல்!
சீட்டு மோசடி, ஓ.டி.பி மோசடி, ஏ.டி.எம் மோசடி... குற்றவாளிகளுக்குத் துணைபோகும் நாமும் குற்றவாளிகளே!
பெங்களூருவில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்த டோமி வர்கீஸ், ஷைனி தம்பதியிடம் பல பேர் ரூ.100 கோடி வரை முதலீடு செய்து வந்த நிலையில், தற்போது அவர்கள் மோசடி செய்துவிட்டு, கென்யா நாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 400 பேர் இதுவரையில் போலீஸிடம் புகார் அளித்துள்ளனர்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் பணத்தை மோசடிக்காரர்களிடம் பறிகொடுத்த ஏதோ ஓர் அனுபவம் இருக்கவே செய்யும். நம் பணம் என்பது, நம் உழைப்பால் சேர்த்த செல்வம். ஓய்வைவிட்டு, உறக்கத்தைவிட்டு, ஆரோக்கியத்தைவிட்டு, உறவுகளைவிட்டு என இதற்காக வாழ்வில் நாம் இழப்பவை பல. அப்படி ஈட்டிய பணத்தை கவனக் குறைவாலும், விழிப்பு உணர்வின்மையாலும், பொருளாதார அறிவின்மையாலும் இழப்பது, துயரமானதுதானே.
இங்கு பல்வேறு வழிகளில் ‘உழைத்துக் கொண்டுள்ளனர்’ பொருளாதாரத் திருடர்கள். எந்த வகைகளில் எல்லாம் ஏமாற்றப்படலாம் என்பதை முதலில் அறிந்தால்தான், அவர்களிடமிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளும் விழிப்பு உணர்வை நாம் பெற முடியும்.
மக்களின் நம்பிக்கையைப் பெற்று சீட்டு கம்பெனி, நகைச்சீட்டு போன்ற சேமிப்புத் திட்டங்கள் மூலம் ஏமாற்றுவது; `நூறு ரூபாய் முதலீடு செய்தால் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்’ போன்ற சாத்தியமில்லாத வாக்குறுதிகள் கொடுக்கும் `பொன்சி' (Ponzi) திட்டங்கள் மூலம் ஆசையைத் தூண்டி பணத்தைச் சுருட்டுவது; காந்தப்படுக்கை முதல் கிரிப்டோகரன்சி வரை நமக்குப் பரிச்சயமில்லாதவற்றில் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்வது என, நிறுவனப் பெயர்களால் ஏமாற்றுவது ஒருபக்கம்.
தனிநபர்களாக நம்மை அணுகி, `பேங்க் அக்கவுன்ட் நம்பர், ஓ.டி.பி சொல்லுங்கள்’ என்று வங்கித் தரப்பில் இருந்து பேசுவதுபோல ஏமாற்றுவது; இமெயில் அனுப்பி ஏமாற்றும் ‘ஃபிஷிங்’ (Phishing); எஸ்.எம்.எஸ் மூலம் ஏமாற்றும் ‘ஸ்மிஷிங்’ (Smishing); பேமென்ட் கார்டு விவரங்களைத் திருடும் ‘ஸ்கிம்மிங்’ (Skimming); `நாங்கள் கஸ்டம்ஸில் இருந்து அழைக்கிறோம், உங்களுக்குச் சட்டத்துக்குப் புறம்பான ஒரு பார்சல் வந்திருக்கிறது’ என்று பேசும் ‘விஷிங்’ (Vishing) என... பெருகி வருகின்றன சைபர் குற்றங்களின் வகை மற்றும் எண்ணிக்கை.

இப்படி பல வகைகளில் ஏமாற்றினாலும், இவை அனைத்திலும் ஓர் ஒற்றுமை உண்டு. அது... ஏமாறுபவர்கள்! ஆம்... நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதையே அறியாத நம் அறியாமைதான் இவர்கள் அனைவருக்குமான பொது முதலீடு தோழிகளே.
பொதுவாக, வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களில் நம் உடமை நம்மிடமிருந்து பறிக்கப் படும். ஆனால், பொருளாதாரக் குற்றங்களைப் பொறுத்தவரை, நம் பணத்தை நம் மூலமே இந்தக் குற்றவாளிகள் எடுக்கிறார்கள்; அவர்களிடம் நாம் தூக்கிக் கொடுக்கிறோம். நம்மையும் அறியாமல் குற்றவாளிகளுக்கு நாமே துணையும் போகிறோம்.
விழிப்பு உணர்வுடன் இருப்போம்.... நம் பணம் காப்போம்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்