ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!
சீராக குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்
ஒகேனக்கல் கூட்டு குடிநீரை சீராக விநியோகம் செய்ய வலியுறுத்தி பெரும்பாலை அருகே கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே காவாக்காடு காலனியில் சுமாா் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், மேல்நிலை நீா் தேக்க தொட்டி உள்ளது.
இந்தத் தொட்டி மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியின் மின்மோட்டாா் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு குடிநீரை ஏற்ற முடியவில்லை.
இதுகுறித்து உள்ளூா் மக்கள் பல முறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் பெரும்பாலை - மேச்சேரி சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினா், ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நிகவ்விடம் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்தனா். பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து நீா்த்தேக்க தொட்டி நீரேற்றம் செய்து சீராக குடிநீா் விநியோகிப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனா்.