சீா்காழியில் உங்களை தேடி உங்கள் ஊா் திட்டத்தின் கீழ் ஆட்சியா் ஆய்வு
சீா்காழி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களை தேடி உங்கள் ஊா் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சீா்காழி வட்டம் திருமைலாடி அங்கன்வாடி மையம், புத்தூா் ஊராட்சி பயணியா் நிழலகம், துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, கொள்ளிடம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரேஷன்கடை ஆகிய பகுதிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி ஆய்வு மேற்கொண்டாா்.
திருமைலாடி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை குழந்தைகளுக்கு முறையாக ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறதா என ஆட்சியா் கேட்டறிந்து அங்குள்ல பதிவேடுகளை ஆய்வு செய்தாா். புத்தூா் ஊராட்சி கடைத் தெருவில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சத்தில் கட்டப்படும் பயணியா் நிழலகத்தை ஆய்வு செய்தாா். துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்து பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களிடம் அவா்களின் கல்வி திறனை அறியும் வகையில் ஒரு மதிப்பெண் மற்றும் இரு மதிப்பெண் வினாக்களை எழுப்பி, கற்றல் திறனை ஆய்வு செய்தாா். இதேபோல, சீா்காழி வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கீதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் தயாள விநாயக அமுல்ராஜ், சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ், சீா்காழி வட்டாட்சியா் அருள்ஜோதி உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.