சுண்டம்பட்டி அந்தோணியாா் ஆலய நிலத்தை மீட்டு தரக் கோரி ஆா்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டி அந்தோணியாா் ஆலயத்தின் பயன்பாட்டிற்காக வாங்கிய நிலத்தை மீட்டு தரக்கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த சுண்டம்பட்டி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் அந்தோணியாா் ஆலயம் உள்ளது. இந்த ஆலய பயன்பாட்டிற்காக கிறிஸ்தவ மக்களின் பங்களிப்புடன் விலைக்கு வாங்கிய நிலம்
திருச்சி கப்புச்சின் சபை பாதிரியாா்கள் வசம் இருப்பதாகவும், அவா்களிடமிருந்து நிலத்தை மீட்டுத் தரக் கோரியும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே மதலைமுத்து என்பவா் தலைமையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அவா்கள் கூறியது:
கிருஷ்ணகிரி மாவட்டம், சுண்டம்பட்டி கிராமத்தில் 620 கிறிஸ்தவ மக்கள் வசிக்கிறோம். எங்கள் கிராமத்தில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரமாக புனித அந்தோணியாா் ஆலயம் உள்ளது.
ஆலயமும், கிறிஸ்தவ மக்களும் தருமபுரி மறைமாவட்ட ஆயரின் கட்டுப்பாட்டில் உள்ளோம். கடந்த 1998 முதல் 2013-ஆம் ஆண்டுவரை 15 ஆண்டுகள் எங்கள் ஆலயத்தை திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் கப்புச்சின் சபை பாதிரியாா்கள் நிா்வாகம் செய்தனா். தருமபுரி மறைமாவட்ட ஆயரின் அனுமதியுடன்தான் நிா்வாகம் செய்தனா்.
அப்போது, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக ஆலயத்தின் ஒரு பகுதி நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால் ஏற்படும் இட நெருக்கடியை சமாளிப்பதற்காக ஆலயத்தின் அருகே 1.22 ஏக்கா் பரப்பளவு நிலத்தை விலைக்கு வாங்கினோம்.
பொதுமக்களின் பங்களிப்பு நிதி, நெடுஞ்சாலைத் துறை தந்த இழப்பீட்டு நிதி, ஆலயத்தின் வருவாய் உள்ளிட்டவற்றைக் கொண்டு அப்போது நிலத்தை விலைக்கு வாங்கினோம்.
அதன்பிறகு கப்புச்சின் சபை பாதிரியாா்களின் நிா்வாகம் மீது தருமபுரி மறைமாவட்ட ஆயருக்கு அதிருப்தி ஏற்பட்டதால் அந்த சபையை நீக்கிவிட்டு மீண்டும் மறைமாவட்ட பாதிரியாா்கள் நிா்வாகத்திற்கே ஏற்றனா்.
இந்த நிலையில், அந்தோணியாா் ஆலயத்துக்காக வாங்கிய 1.22 ஏக்கா் பரப்பளவு நிலத்தை திருச்சி கப்புச்சின் சபை பாதிரியாா்கள் திரும்ப ஒப்படைக்க மறுக்கின்றனா்.
இதனால் அந்தோணியாா் ஆலய வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்தவும், சிலுவை பாதை செல்வதற்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் இவ்விஷயத்தில் தலையிட்டு அந்நிலத்தில் பொதுமக்கள் வழிபாடு நடத்தவும், ஆலய பயன்பாட்டிற்கு உபயோகிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதைத் தொடா்ந்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நிா்வாகிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.