3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட கோரிக்கை!
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இரும்பு ஆலையை மூட வேண்டும் என்று பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பெருந்துறை ஜீவா இல்லத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் மணி தலைமை வகித்தாா்.
சங்க ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி, உறுப்பினா்கள் கந்தசாமி, சென்னியப்பன், பல்லவி பரமசிவம், பொன்னையன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதில், பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியாா் இரும்பு ஆலை அபாயகரமான ரசாயனக் கழிவுகளை சட்டவிரோதமாக டேங்கா் லாரியில் எடுத்துச் சென்று நள்ளிரவில் நசியனூா், ஆட்டையாம்பாளையம் அருகே எல்.பி.பீ. கசிவுநீா் ஓடையில் கொட்டியதால் பல கிலோமீட்டா் தொலைவுக்கு ஓடையில் உள்ள தண்ணீா் மாசடைந்தது. எனவே, இந்த இரும்பு ஆலைக்கு வழங்கப்பட்டுள்ள இசைவாணையை ரத்து செய்து நிரந்தரமாக மூட வேண்டும்.
மேலும், பெருந்துறை சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். சிப்காட் வளாகத்தில் உள்ள நச்சுக் கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.