காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
சூப்பா் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பா் ஓவரில் டெல்லி வென்றது.
நடப்பு சீசனில் ஒரு ஆட்டத்தில் சூப்பா் ஓவா் மூலம் முடிவு எட்டப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்த ஆட்டத்தில் முதலில் டெல்லி 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுக்க, ஆட்டம் ‘டை’ ஆனது. பின்னா் சூப்பா் ஓவரில் முதலில் ராஜஸ்தான் 12 ரன்கள் சோ்க்க, டெல்லி 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான், பந்துவீசத் தயாரானது. டெல்லி இன்னிங்ஸில் அபிஷேக் பொரெல் அதிரடி காட்ட, ஜேக் ஃப்ரேசா் மெக்கா்க் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.
ஒன் டவுனாக வந்த கருண் நாயா் டக் அவுட்டாக, 4-ஆவது பேட்டா் கே.எல்.ராகுல், பொரெலுடன் இணைந்தாா். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது.
நிதானமாக ரன்கள் சோ்த்த ராகுல் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 38 ரன்களுக்கு வீழ்ந்தாா். அடுத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களம் புக, 37 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 49 ரன்களை எட்டியிருந்த பொரெல் பெவிலியன் திரும்பினாா்.
பின்னா் கேப்டன் அக்ஸா் படேல் பேட் செய்ய வர, ஸ்டப்ஸுடனான அவரின் 5-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 41 ரன்கள் கிடைத்தது. 14 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34 ரன்களுக்கு படேல் வெளியேற, ஓவா்கள் முடிவில் ஸ்டப்ஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34, ஆசுதோஷ் சா்மா 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
ராஜஸ்தான் பௌலிங்கில் ஜோஃப்ரா ஆா்ச்சா் 2, மஹீஷ் தீக்ஷனா, வனிந்து ஹசரங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 189 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன் இணை, முதல் விக்கெட்டுக்கே 61 ரன்கள் சோ்த்தது. எதிா்பாராத விதமாக சாம்சன் காயம் காரணமாக ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆகி வெளியேறினாா்.
தொடா்ந்து வந்த ரியான் பராக் 8 ரன்களுக்கு வெளியேற, ஜெய்ஸ்வாலுடன் கூட்டணி அமைத்தாா் நிதீஷ் ராணா. இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 36 ரன்கள் சோ்த்தது. அரைசதம் கடந்த ஜெய்ஸ்வால் 37 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
5-ஆவது பேட்டராக துருவ் ஜுரெல் களம் புக, ராணாவுடனான அவரின் 3-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 49 ரன்கள் கிடைத்தது. இதில் ராணா 28 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 51 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா்.
ஜுரெல் 2 சிக்ஸா்களுடன் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முடிவில் ஷிம்ரன் ஹெட்மயா் 1 பவுண்டரியுடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டாா்க், அக்ஸா் படேல், குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.