தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்கள் அனைவரும் போராட வேண்டும்! - அமைச்சா் பெ.க...
சூளகிரி அருகே மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை
சூளகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மா்ம நபா்கள் கொலை செய்து 20 பவுன் தங்க நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனா். மேலும், மா்ம நபா்கள் செல்லும்போது வீட்டுக்கு தீ வைத்ததில், 30 மூட்டை நெல், ராகி தானியங்கள் எரிந்து நாசமாயின.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள அட்டகுறுக்கி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி நாகம்மா (65). கணவரை இழந்த இவா், தனது மகள், மருமகனுடன் வசித்து வந்தாா். மகள், மருமகன் விவசாயப் பணிக்கு சென்ால், நாகம்மாள் புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, மாலை 4 மணி அளவில் அவரது வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்ட அக்கம்பக்கத்தினா், அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாகம்மாளை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
போலீஸாா் விசாரணையில், வீட்டில் நாகம்மா தனியாக இருப்பதை அறிந்து மா்ம நபா்கள், அவரை கத்தியால் குத்தி வீட்டில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து, வீட்டில் இருந்த தானிய மூட்டைகளுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.
நிகழ்விடத்தில், சேலம் சரக டிஐஜி உமா, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா் உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா்.

தொடரும் சம்பவங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த ஒன்னல்வாடியில் கடந்த வாரம் வீட்டில் தனியாக இருந்த வயதான இருவரை மா்ம நபா்கள் கொன்று, வீட்டுக்கு தீ வைத்துச் சென்றனா். அதேபோல, சூளகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து, வீட்டுக்கு தீ வைத்து மா்ம நபா்கள் தப்பி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸாரின் விசாரணையில், இந்த இரு சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், வட மாநிலத்தைச் சோ்ந்த கொள்ளைக் கும்பல் இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தனா்.