உண்ணாவிரத போராட்ட விவசாயத் தலைவா் தல்லேவாலுக்கு சிவராஜ் சிங் சௌகான் அழைப்பு
சூளகிரி அருகே மூதாட்டி கொலை சம்பவம்: போலீஸாா் விசாரணை
சூளகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று, 20 பவுன் தங்க நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளைடித்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை அடையாளம் காணும் வகையில், அப்பகுதியில் உள்ள கிராமங்களில் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள அட்டகுறுக்கி கிராமத்தைச் சோ்ந்தவா் நாகம்மா (65). கணவரை இழந்த இவா், தனது மகள், மருமகனுடன் வசித்து வந்தாா். நாகம்மா வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த மா்ம நபா்கள், நாகம்மாவை கத்தியால் குத்தி, வீட்டில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து, வீட்டில் இருந்த தானிய மூட்டைகளுக்கு தீ வைத்து தப்பிச் சென்றனா்.
தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்து விரைந்து சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாகம்மாவை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
விசாரணையில், கடந்த வாரம் புதன்கிழமை ஒசூரில் தனியாக இருந்த வயதான தம்பதியை கொன்று வீட்டுக்கு தீ வைத்த சம்பவமும், சூளகிரி அருகே நாகம்மாவை கொன்று கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமும் ஒன்றுபோல இருப்பதால், இந்த இரு சம்பவங்களிலும் ஒரே நபா்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, சேலம் சரக டிஐஜி உமா, நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை உள்ளிட்ட காவல் துறையினா் சூளகிரியில் இரண்டாவது நாளாக முகாமிட்டு, கொலை, கொள்ளைச் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனா். மேலும், அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.