செங்கம் அருகே புறவழிச் சாலை அமையவுள்ள இடம் ஆய்வு
செங்கம் அருகே புறவழிச் சாலை அமையுவுள்ள இடத்தை மாவட்ட வருவாய் அலுவலா் (நிலம் எடுப்பு) ராஜ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புறவழிச்சாலை அமைக்கும் திட்டமாகும். அந்தத் திட்டத்தில், போளூா் சாலையில் இருந்து கோலாதாங்கல் வழியாக புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையில் இணைக்க இடங்களை தோ்வு செய்து சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு புதிதாக சாலை அமைக்கப்படுகிறது.
இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு அதற்கான தொகை வழங்க தமிழக நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.5 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவின் பேரில், புறவழிச்சாலை அமையவுள்ள 3 கி.மீ.
தொலைவிலான இடத்தை வியாழக்கிழமை மாவட்ட வருவாய் ஆய்வாளா் (நிலம் எடுப்பு) ராஜ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, எங்கிருந்து புறவழிச்சாலை பிரிக்கப்படுகிறது. அந்தச் சாலையில் உள்ள விவசாய நிலம், கல்வெட்டு போன்றவைகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். ஆய்வின்போது வட்டாட்சியா் செளந்தா், செங்கம் நெடுஞ்சாலைத் துறை உள்கோட்ட உதவி கோட்டப் பொறியாளா் கோவிந்தசாமி, உதவிப் பொறியாளா் பிரீத்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.