விடுதி வளாகத்தில் மருத்துவ மாணவி வன்கொடுமை! இது மத்தியப் பிரதேசத்தில்...
செங்கல்பட்டு: கால், வாய் நோய் தடுப்பூசி பணி தொடக்கம்
கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கோமாரி நோய் 6-ஆம் சுற்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 2.54 லட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களை கால் மற்றும் வாய் (கோமாரி) நோயிலிருந்து காத்திடும் பொருட்டு, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ், கால் மற்றும் வாய் நோய் 6-ஆம் சுற்று தடுப்பூசி பணி வெள்ளிக்கிழமை (ஜன. 3) முதல் ஜன. 31 வரை அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளது.
4 மாத வயதுடைய கன்று முதல் சினை, கறவை உள்ளிட்ட அனைத்து பசு, எருமை மற்றும் காளைகளுக்கு இந்தத் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அத்துடன் காது வில்லைகள் ஏற்கெனவே முந்தைய சுற்றுகளில் போடப்படாத கால்நடைகளுக்கு மீண்டும் காது வில்லைகள் அணிவிக்கப்பட வேண்டியது அவசியம். அத்துடன் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள கன்றுகள், அதாவது 4 முதல் 5 மாதம் வரை உள்ள கன்றுகளுக்கும் காதுவில்லை அணிவிக்கப்படுகிறது. மேலும், 4 முதல் 5 மாதம் வரை உள்ள கன்றுகளுக்கு பூஸ்டா் தடுப்பூசி ஒரு மாத இடைவெளியில் மீண்டும் போட வேண்டும்.
2030-ஆம் ஆண்டுக்குள் கால் மற்றும் வாய் நோயை முற்றிலுமாக ஒழிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும். தற்போது 6-ஆவது சுற்று தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்படி தடுப்பூசி பணிக்காக கால்நடை உதவி மருத்துவா்கள் தலைமையில், கால்நடை ஆய்வாளா்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் அடங்கிய 61 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலா்கள், கிராம உதவியாளா்கள், ஆவின், புதுவாழ்வு (ம) மகளிா் திட்டத்தினருடன் இணைந்து கால்நடைகளுக்கு 100% தடுப்பூசி பணி மேற்கொள்வதுடன் தடுப்பூசி பணி அடையாள அட்டை வழங்கி பதிவுகளும் மேற்கொள்ள உள்ளனா்.
இந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை செங்கல்பட்டு மாவட்டம், வில்லியம்பாக்கம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மரு.பாஸ்கரன், உதவி இயக்குநா் மரு.சாந்தி மற்றும் கால்நடை மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.