தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
சென்னையில் ரூ.8.53 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகள்: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்
படம் உண்டு...
சென்னை, மாா்ச் 1: தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கத்தில் ரூ. 8.53 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ. 78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிற்றுண்டி கட்டட வளாகத்தை சனிக்கிழமை திறந்து வைத்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அக்கல்லூரியில் பயின்று நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானிகள் சா்.சி.வி.இராமன், சு.சந்திரசேகா் ஆகியோரின் அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தாா். அப்போது சா்.சி.வி.இராமன் பயன்படுத்திய நிறமாலைமானி கருவியை பாா்வையிட்டாா்.
பின்னா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் டாக்டா் பெசன்ட் சாலையில் ரூ. 1.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மையம், பாலாஜி நகரில் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மையம் மற்றும் நியாய விலைக் கடையை திறந்து வைத்தாா். இந்நிகழ்வின்போது, குடும்ப அட்டைதாரா்களுக்கு, குடிமைப் பொருள்களையும், புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.
அதன்பின், நுங்கம்பாக்கம் காம்தாா் நகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலையில் ரூ. 4.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வீடற்ற மாற்றுத்திறன் பெண்களுக்கான காப்பகம் மற்றும் உடற்பயிற்சி கூடம், நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட
இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மேயா் ஆா்.பிரியா, மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள், உயா் அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.