சென்னை: நடுரோட்டில் சிதறிக் கிடந்த தோட்டாக்கள்; பாதுகாப்பு படை வீரரிடம் ஒப்படைப்பு..!
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், மோதிலால் நகரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சிக்னல் அருகே சென்றபோது அங்கு ஏ.கே.47 துப்பாக்கியின் உதிரிபாகம், 30 தோட்டாக்கள் கிடந்தன. உடனே அவற்றை எடுத்த சிவராஜ், அருகில் உள்ள ராமாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன்பேரில் ராமாபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், பூந்தமல்லி கரையான்சாவடியில் உள்ள சி.ஆர்.பி.எஃப் முகாமில் பணியாற்றும் ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர் அன்னப்பு லட்சுமி ரெட்டி என்பவர், தன்னுடைய துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்த தோட்டாக்களுடன் கூடிய மெகஸின் தவறி விழுந்துவிட்டதாக ராமாவரம் போலீஸாரிடம் தெரிவித்தார்.
உடனடியாக ராமாபுரம் போலீஸார் பாதுகாப்பு படை வீரர் அன்னப்பு லட்சுமி ரெட்டியிடம் விசாரணை நடத்தினர். அதோடு அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில் பாதுகாப்பு படை வீரர் அன்னப்பு லட்சுமி ரெட்டி வாகனத்தில் செல்லும் போது துப்பாக்கியின் உதிரி பாகம், தோட்டாக்கள் கீழே விழும் காட்சி பதிவாகியிருந்தது. அதை பாதுகாப்பு படை வீரர் அன்னப்பு லட்சுமி ரெட்டி கவனிக்காமல் செல்வதும் பதிவாகியிருந்தது. அதோடு துப்பாக்கியின் உதிரி பாகம், தோட்டாக்களுக்குரிய ஆவணங்களையும் பாதுகாப்பு படை வீரர் அன்னப்பு லட்சுமி ரெட்டி, ராமாபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தார். அதை ஆய்வு செய்த பிறகு அவரிடம் சாலையில் கிடந்த துப்பாக்கி உதிரிபாகம், தோட்டாக்களை ராமாபுரம் போலீஸார் ஒப்படைத்தனர்.
சாலையில் துப்பாக்கி, தோட்டாக்கள் சிதறிக் கிடந்த சம்பவம் சிறிது நேரம் பரப்பபை ஏற்படுத்தியது.