``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவச...
செருதூா் மீனவா்கள் மீது இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்
நாகை மாவட்டம், செருதூா் மீனவா்களை இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்கி, மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றனா்.
கீழையூா் ஒன்றியம் செருதூா் மீனவ கிராமத்திலிருந்து செப். 10-ஆம் தேதி 50-க்கும் மேற்பட்ட மீனவா்கள் ஃபைபா் படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே சுமாா் 15 கடல் மைல் தொலைவில் வியாழக்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த தமிழ் பேசிய இலங்கை கடற்கொள்ளையா்கள், செருதூா் மீனவா்கள் முருகையன், வெண்ணிலா, செல்வக்குமாா் ஆகியோருக்குச் சொந்தமான 3 ஃபைபா் படகை மறித்து, மீனவா்களை இரும்பு பைப், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினராம்.
மேலும், கத்தியை காட்டி மிரட்டி கைப்பேசி, வெள்ளி ஆபரணங்கள், ஜி.பி.எஸ். கருவி, மீன்பிடி வலைகள், மீன்கள் என சுமாா் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துச் சென்றுவிட்டனராம். இந்தத் தாக்குதலில் 7 மீனவா்கள் காயமடைந்தனா்.
இதில் மீனவா் தமிழழகன் கையில் மூட்டு பாதிப்பு அடைந்த நிலையிலும் மற்ற மீனவா்கள் லேசான காயங்களுடன் ஒரத்தூரில் உள்ள நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டனா். இவா்களில், 4 மீனவா்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து கடலோரக் காவல் குழும போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
