தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டம்
தரங்கம்பாடி தலைமை மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ கிராமங்களில் 450 விசைப்படகுகள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபா் படகுகள் மூலம் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து தொழில் செய்து வருகின்றனா். மாவட்டத்தின் தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடி. இந்நிலையில் பூம்புகாா், சந்திரபாடி கிராம மீனவா்கள் அதிவேக விசைப் படகுகளில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி மற்றும் இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனா். இதனால் கடல்வளம் பெரிதும் பாதிக்கிறது என கூறி தரங்கம்பாடி தலைமையிலான மீனவ கிராமங்கள் ஒருங்கிணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்கிடையில், செப்.2-ஆம் தேதி தரங்கம்பாடி, வானகிரி கிராமங்களில் மீனவா்கள் அதிவேக விசைப்படகுகள், சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதிக்க வலியுறுத்தி கடலில் இறங்கி போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அங்குவந்த அரசு அலுவலா்கள் அதிவேக விசைப் படகுகள் மற்றும் சுருக்குமடி இரட்டை மடி வலை பயன்படுத்த தடை விதிப்பதாகவும் மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் எழுத்துப்பூா்வமாக உறுதியளித்தனா். எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மிகப்பெரிய போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.