`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; பதிவு செய்யுங்கள்
2025 மார்ச் 28-ம் தேதி சென்னை கொரட்டூர் பாடலாத்ரி சீயாத்தம்மன் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற இருக்கிறது. இதில் நீங்களும் கலந்துகொண்டு அருள்பெறலாம். அதுகுறித்த விவரங்கள் உங்களுக்காக...
முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

சென்னை கொரட்டூரில் 1000 ஆண்டுகளைக் கடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சீயாத்தம்மன் ஆலயம் உள்ளது. கொரட்டூர் ஏரிக்கரையில் அமர்ந்து அவள் பல்லவர், சோழர் காலம்தொட்டு இன்று வரை ஆட்சி செய்து வருகிறாள். பல்லவ அரசர்கள் ராஜசிம்மன், நந்திவர்மன் காலங்களில் இந்த ஆலயம் கட்டப்பட்டு வணங்கப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
புராண காலத்தில் தொண்டை மண்டலத்தில் அட்டூழியம் செய்து கொண்டிருந்த அசுர சக்திகளை தேவி பராசக்தி கொரட்டூர் ஏரிக்கரையில் இருந்த பிரமாண்ட ஆலமரத்தின் அடியேத் தோன்றி வதம் செய்தாள் என்கிறது புராணம். தீய சக்திகளை அழித்து தன் சேய்களான பக்தர்களைக் காத்ததால் தேவி சேய் காத்த அம்மன் என்று இங்கேயே நிலைத்துவிட்டாள். இவளே இன்று மருவி சீயாத்தம்மன் என்றாகிவிட்டாள். இவளது திருமேனி புற்றுகள் சூழ காலங்கள் கடந்தும் காத்து நின்றது. ஒருமுறை பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் பெரும் போர் ஒன்று பாலாற்றங்கரையில் மூண்டபோது, பல்லவ அரசன் ராஜசிம்மனின் கனவில் தேவி சீயாத்தம்மன் தோன்றினாள்.

தேவியின் பெருமைகளை உணர்ந்த ராஜசிம்மன், 'தாயே இந்த போரில் பல்லவர்களுக்கு வெற்றி அருளினால், நீ எழுந்தருளிய இடத்திலேயே உனக்கு ஆலயம் எழுப்பி வழிபடுவேன்' என்றான். அவன் பக்கம் நியாயம் இருந்ததை அறிந்த தேவி பல்லவர்களுக்கு வெற்றியை அருளி கொரட்டூரில் கோயிலும் கொண்டு அமர்ந்துவிட்டாள் என்கிறது தலவரலாறு.
யானை வாகனம் எதிரே எழுந்துள்ள சுயம்புவான அன்னையின் காதில் அசுர சக்தியின் வடிவான குழந்தை உள்ளது. அவள் திருவடிகளின் கீழ் சர்வ மங்கலங்கள் அருளும் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சீயாத்தம்மன் அருகில் பிராமி, வைஷ்ணவி, கௌமாரி, மகேஷ்வரி, சாமுண்டி, வாராஹி எனும் சப்த மாதர் உள்ளனர். ஆலயத்தில் சக்தி விநாயகர், பாலமுருகர், அண்ணன்மார்கள் சந்நிதியும், ஏரிக்கரை வடக்கே நாராயணி துர்க்கையும் காட்சி தருகின்றனர். கோயிலுக்குள் தெற்கே பிரதான மண்டபமும், நவகிரக சந்நிதியும் உள்ளன.
இங்கே அதிசயமாக விழுதுகள் இல்லாத 150 ஆண்டு வயதுடைய ஆலமரம் உள்ளது. அதன் கீழ் பால விநாயகர், நாகாத்தம்மன், நாகராஜன் உள்ளனர். இந்த ஆலயம் பாடலாத்ரி சீயாத்தம்மன் என்றே சொல்லப்படுகிறது. பாடலாத்ரி என்றால் சிவப்பான மலை என்கிறார்கள். அருகே செங்குன்றம் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார்கள். கொரட்டூர் தொடங்கி செங்குன்றம் வரை உள்ள ஊர்களுக்கு இவளே காவல் தெய்வமாக இருந்ததால் அதை குறிக்க பாடலாத்ரி சீயாத்தம்மன் என்றாகி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இவளை வேண்டிக்கொண்டால் எண்ணிய காரியங்கள் ஈடேறும். மனமுருகி வேண்டி, 9 வாரம் கோயிலைச் சுற்றி வந்து வழிபட்டு 10-வது வாரம் இவளிடம் மடியேந்தி எலுமிச்சை பழம் வாங்கிச் சென்றால் எல்லா துன்பங்களும் தீரும்; எல்லா வளங்களும் நம்மை வந்து சேரும் என்பது நம்பிக்கை.
முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!
பல்வேறு சிறப்புகளை உடைய இந்தத் தலத்தில் பெண்கள் திருவிளக்கேற்றி வழிபாடு செய்கிறபோது சகல நன்மைகளும் உண்டாகும். 'கடன்கள் தீரும்' 'திருமண வேண்டுதல்கள் பலிக்கும்; சீயாத்தம்மன் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்' என்கிறார்கள் பக்தர்கள்.

உலக நன்மைக்காகவும் தனிப்பட்ட துயர் நீங்கவும் பிரார்த்தனை செய்ய உகந்த வழிபாடு திருவிளக்கு வழிபாடு. அந்த அற்புதமான வழிபாட்டில் கலந்துகொள்ள வாசகிகளான உங்களையும் அழைக்கிறோம்.
கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:
விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.
அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.
முன்பதிவுக்கு: 97909 90404, 044-66802980/07