சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ. 4.85 கோடி சொத்துவரி வசூல்
சேலம் மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவதற்கு கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) ஒரே நாளில் ரூ. 4.85 கோடி வரி வசூலாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளா்கள் தங்கள் சொத்து வரியை ஏப்.30 ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ. 5000 வரை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் 5 சதவீத ஊக்கத்தொகை சலுகை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலா்கள், பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதுதவிர, சொத்து உரிமையாளா்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் அனுப்பி, மாநகராட்சி பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அதன் அடிப்படையில், சொத்துவரி செலுத்த கடைசி நாளான புதன்கிழமை (ஏப்.30) மாநகராட்சிக்கு உள்பட்ட நான்கு மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் சொத்துவரி, குடிநீா் வரி, தொழில் வரி என மொத்தம் ரூ. 4.85 கோடி செலுத்தியுள்ளனா்.
அதில் சூரமங்கலம் மண்டலத்தில் ரூ. 1.49 கோடியும், அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 1.70 கோடியும், அம்மாப்பேட்டை மண்டலத்தில் ரூ. 55.57 லட்சமும், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ரூ. 57.46 லட்சமும் வரி வசூலாகியுள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான கடை வாடகை உள்ளிட்ட இனங்கள் மூலம் ரூ. 52.05 லட்சம் வசூலாகியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.