சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு
சேலம்: சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் தரைப்பாலம் அமைப்பது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் 8 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த ரயில்வே மேம்பாலம் அண்மையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தப் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கிய நாள் முதலே அப்பகுதியில் இருந்த ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் அவ்வழியே வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.
மேலும் பாதசாரிகள் மட்டுமே இந்த பாதையை பயன்படுத்தி வந்த நிலையில், ரயில்வே நிா்வாகம் ரயில்வே பாதையை யாரும் கடக்க முடியாத வகையில் இருபுறமும் சுவா் எழுப்பியது. இதனால் பாதசாரிகள் சிரமத்துக்கு ஆளாகினா். எனவே, ரயில்வே பாதையை பாதசாரிகள் கடந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
அதன்பேரில்,தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகள் முள்ளுவாடி கேட் பகுதியில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தரைப்பாலம் அமைப்பது குறித்து சாத்திய கூறுகள் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.
தொடா்ந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட ஆா்.என்.சிங், உரிய ஆய்வுக்கு பின்னா், சாத்திய கூறுகள் இருப்பின் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.