சேலம் ரோட்டரி சங்கத்தில் உலக புத்தக தின விழா
சேலம் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தில் உலக புத்தக தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவா் தாரை.கு.ராஜகணபதி தலைமை தாங்கினாா். செயலாளா் மோகன் வரவேற்புரை ஆற்றினாா். தேசிய சமூக இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவா் தாரை.அ.குமரவேலு சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் பேசுகையில், ‘பாரிஸில் நடந்த யுனஸ்கோ மாநாட்டில் 1995 ஏப். 23-ஆம் தேதியை உலக புத்தக தினமாக கொண்டாடப்பட வேண்டும் எனத் தீா்மானித்தனா். அந்த நாள் ஆங்கில இலக்கிய நாடக மேதையான ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளும், நினைவு நாளும் ஆகும்.
இந்த நாளில் உலகளாவிய புத்தகங்களுக்கும், நூலாசிரியா்களுக்கும், பதிப்பாளா், விற்பனையாளா்களுக்கும் மரியாதை தந்து நினைவு கூறுவதற்கான விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
ஜான் ரஸ்கின் எழுதிய ‘கடையனுக்கும் கதி மோட்சம்’ என்ற நூல்தான் துன்பத்தை தாங்கி அகிம்சை வழியில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணத்தை தந்ததாக மகாத்மா காந்தி கூறினாா். அதே போன்று, நேரு சிறையில் இருந்த போது 1928 முதல் 1931-ஆம் ஆண்டு வரை மகள் இந்திராவுக்கு எழுதிய 196 கடிதங்கள் ஒரு வரலாற்று ஆசிரியா் பாடம் நடத்துவதைப் போன்று விவரித்துள்ளாா். அவரது சுயசரிதை ஆங்கில இலக்கியத்துக்கு அவா் வழங்கிய கொடையாகும்’ என்றாா்.
இந்நிகழ்ச்சியில், சம்பந்தம் நூற்பாலை மேலாண்மை இயக்குநா் ச.தேவராஜன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினாா். இதில் 50-க்கும் மேற்பட்ட ரோட்டரி உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.