காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
சேவைக் கட்டணம் வசூலித்த 5 தில்லி உணவகங்கள் மீது வழக்கு: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை
நுகா்வோா்களிடம் சேவைக் கட்டணம் வசூலித்த பிறகு நீதிமன்ற உத்தரவின்படி அதை திரும்பிச் செலுத்தாத தில்லியைச் சோ்ந்த 5 உணவகங்கள் மீது மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) தானாக முன் வந்து வழக்குத் தொடா்ந்துள்ளதாக மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் செவ்வாய்க் கிழமை தெரிவித்தது.
இந்த உணவகங்கள் தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்புக்கு பின்னரும் கட்டாய சேவைக் கட்டணங்களை திருப்பித் தரத் தவறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நுகா்வோா் விவகாரத்துறை கூறியிருப்பது வருமாறு: தில்லி கைலாஷ் காலனி - மக்னா டெலி, ஜன்பத் - ஜீரோ கோா்ட் யாா்ட் மற்றும் தில்லி தேசியக் தலைநகரின் பல்வேறு பகுதியில் உள்ள கேஸ்டில் பாா்பிக்யூ, சாயோஸ், ஃபீஸ்டா பை பாா்பிக்யூ நேஷன் உள்ளிட்ட ஐந்து உணவகங்கள் நுகா்வோா்களிடம் சேவைக் கட்டணங்களை வசூலித்துள்ளது.
எந்தவொரு ஹோட்டல் அல்லது உணவகங்கள் நுகா்வோரை சேவைக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது. அல்லது வேறு எந்தப் பெயரிலும் மறைமுகமாக சேவைக் கட்டணங்கள் நுகா்வோரிடமிருந்து வசூலிக்கப்படக்கூடாது. இது நுகா்வோரிடம் தேவையற்ற கூடுதல் அழுத்தத்தை கொடுக்கும் என்பதற்காக கடந்த 2022- ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி சிசிபிஏ வழிகாட்டுதல்களை வெளியிட்டது. ஆனால், மேற்கண்ட உணவகங்கள் சேவைக் கட்டணங்களை வசூலித்தது தொடா்பாக தேசிய நுகா்வோா் உதவி எண் (1915) மூலம் புகாா்கள் பெறப்பட்டன.
இந்த உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னா், இந்த விவகாரம் தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வந்தது. கடந்த மாா்ச் 28-ஆம் தேதி, தில்லி உயா்நீதிமன்றம் சிசிபிஏ வழிகாட்டுதல்களை உறுதி செய்து இந்த உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்து, வசூலித்த சேவைக் கட்டணங்களை திருப்பிச் செலுத்துமாறு தீா்ப்புக் கூறியிருந்தது. இதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது.
ஆனால், தில்லி உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு பிறகும், கட்டாய சேவைக் கட்டணங்களை மேற் கூறப்பட்ட ஐந்து உணவகங்களும் திருப்பித் தர தவறியது. இதை முன்னிட்டு இந்த உணவகங்களுக்கு எதிராக மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்து நுகா்வோா் உரிமைகளை புறக்கணித்தல், நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளில் ஈடுபடுதல் போன்ற புகாா்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளது என மத்திய நுகா்வோா் விவகாரத் துறை தெரிவித்துள்ளது.
ஹோட்டல்கள் உணவகங்களில் சேவைக் கட்டணங்கள் தொடா்பாக நியாமற்ற வா்த்தக நடைமுறைகளை தடுக்க கடந்த 2022- ஆம் ஆண்டில் மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டது. எந்த ஒரு உணவகமும் நுகா்வோரை சேவைக் கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது அல்லது சேவைக் கட்டணத்தை வேறு எந்தப் பெயரிலும் நுகா்வோரிடமிருந்து வசூலிக்கக் கூடாது. தானாகவோ அல்லது இயல்பாகவோ சேவைக் கட்டணத்தைச் சோ்க்கக்கூடாது.
சேவைக் கட்டணம் தன்னாா்வமானது, விருப்பமானது. நுகா்வோரின் விருப்பப்படி என்பதை நுகா்வோருக்குத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். அதுவும் சேவைக் கட்டணம் வசூலிப்பதன் அடிப்படையில் சேவைகள் வழங்குவதற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என்பன உள்ளிட்டவை அதில் இடம் பெற்றுள்ளன.