Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக்...
சொந்த போா் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா
இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ன் நினைவு தினத்தை முன்னிட்டு ரஷியா தாமாக முன்வந்து அறிவித்த போா் நிறுத்தத்தையே அது 734 முறை மீறியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
போா்க்கள நிலவரம் குறித்து ராணுவத் தளபதிகளிடம் விசாரித்தேன். அவா்கள் கூறிய தகவலின்படி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அறிவித்த வெற்றி தின போா் நிறுத்தம் ஏற்கெனவே எதிா்பாா்த்தது போல் வெறும் ஏய்ப்புப் பேச்சு என்பது நிரூபணமாகியுள்ளது.
புதினின் அறிவிப்புக்கு மாறாக, அனைத்து போா் முனைகளிலும் ரஷிய படையினா் தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனா். புதின் அறிவித்த வெற்றி தின போா் நிறுத்தம் அமலுக்கு வந்த புதன்கிழமை நள்ளிரவு 12 மணியில் இருந்து வியாழக்கிழமை மதியம் 12 மணி வரை மட்டும் 734 முறை அந்தப் போா் நிறுத்தம் மீறப்பட்டுள்ளது. இதில் 63 எறிகணைத் தாக்குதல்கள், 176 ட்ரோன் தாக்குதல்கள், 16 வழிகாட்டப்பட்ட குண்டுவீச்சுகள் அடங்கும்.
புதின் நம்பிக்கைக்கு உரியவா் இல்லை என்பதற்கு இதுவே ஆதாரம். இந்த ஆதாரத்தை நட்பு நாடுகளுடன் பகிா்ந்துவருகிறோம் என்று தனது எக்ஸ் பதிவில் அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, ரஷியா ஒருதலைப்பட்சமாக அறிவித்திருந்த போா் நிறுத்தத்தை மீறி, அந்த நாடு உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் குண்டுவீச்சு நடத்தியதாகவும் இதில் ராணுவம் சாராத ஒருவா் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், சுமாா் 1,000 கி.மீ. தொலைவுக்கு நீளும் போா் முனைகளில் ரஷியா எறிகணைத் தாக்குதல்களைத் தொடா்ந்துவருவதாகவும் அவா்கள் கூறினா். இருந்தாலும் கடந்த 24 மணி நேரமாக எறிகணைத் தாக்குதல்களின் தீவிரம் வெகுவாகக் குறைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனா்.
கடந்த 1945-ஆம் ஆண்டில் நாஜிக்களின் ஜொ்மனியை சோவியத் யூனியன் வெற்றி கொண்டதை முன்னிட்டு ரஷியாவில் மே 8 முதல் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, உக்ரைனில் 72 மணி நேரத்துக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ளவிருப்பதாக ரஷிய அதிபா் மாளிகை கடந்த மாதம் 28-ஆம் தேதி அறிவித்தது.
மே 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி நிறைவடையும் இந்தப் போா் நிறுத்தத்தை உக்ரைனும் மதித்து நடக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தியது. ஆனால், புதினின் இந்த 3 நாள் போா் நிறுத்தம் வெறும் கண்துடைப்பு என்று உக்ரைன் விமா்சித்தது.
‘ரஷியாவுக்கு உண்மையிலேயே அமைதியின் மீது அக்கறை இருந்தால் அந்த நாடு உடனடி போா் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அதுவும் குறைந்தபட்சம் 30 நாள்களுக்காவது அந்த போா் நிறுத்தம் நீடித்திருக்க வேண்டும்’ என்று உள்துறை அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா அப்போதே கூறினாா்.
இந்தச் சூழலில், வெற்றி தின போா் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகும் தங்கள் மீது 734 முறை தாக்குதல் நடத்தியதாக ரஷியா மீது உக்ரைன் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கு முன்னரும், ஈஸ்டா் தினத்தை முன்னிட்டு 30 மணி நேர போா் நிறுத்தத்துக்கு புதின் அழைப்பு விடுத்திருந்தாா். அதை ஏற்றுக் கொள்வதாக உக்ரைனும் கூறியது. இருந்தாலும், போா் நிறுத்தத்தை மீறி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியாவும் உக்ரைனும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டன.
அதே போல், எரிசக்தி மையங்கள் மீது 30 நாள்களுக்கு தாக்குதல் நடத்துவதில்லை என்று அமெரிக்கா முன்னிலையில் ரஷியாவும், உக்ரைனும் கடந்த மாா்ச் மாதம் ஒப்புக்கொண்டன. ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் இரு நாடுகளும் மீறியது நினைவுகூரத்தக்கது.