சொந்த மாநில அரசு மீதே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஆளுநர் கூறலாமா? வழக்குரைஞர் வில்சன்
தமிழக ஆளுநர், சொந்த மாநில அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எவ்வாறு முன்வைக்க முடியும்? என்று தமிழக அரசு வழக்குரைஞர் வில்சன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மோசமாக இருப்பதாகவும், துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என மிரட்டப்பட்டதாகவும் பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் திமுக அரசின் வழக்குரைஞர் பி. வில்சன், தமிழக ஆளுநர் ஆர்என் ரவியின் பொறுப்பற்ற மற்றும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைத் திருத்தவே முடியாது என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளார். தனது சொந்த மாநில அரசு மீது, இவ்வாறு ஒரு அடிப்படை ஆதாரமற்றக் குற்றச்சாட்டை அவர் எப்படி முன்வைக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இவ்வாறு தமிழக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது மிக மோசமான குற்றமாக அமைந்துள்ளது. அவரது அதிகாரங்களை அவர் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.
சட்டவிரோதமாக, உங்களால் கூட்டப்பட்டிருக்கும் இந்த மாநாட்டில் பல்கலை. துணைவேந்தர்கள் பலரும் பங்கேற்கவில்லை. அதற்குக் காரணம், உங்கள் குறிப்பிட்ட கொள்கைகள் மற்றும் அரசியலை, பல்கலைக்கழகத்துக்குள் திணிக்கும் உங்கள் விஷம நோக்கம் அவர்களுக்குப் புரிந்து விட்டது.
எங்களது பல்கலைக்கழகங்கள், கல்வியில் சிறந்து விளங்கும் மையங்களாக வைத்திருக்கவே நாங்கள் விரும்புகிறோம். எங்கள் பல்கலைக்கழகங்களில் அறிவியல் கல்வியை வழங்குவோமே தவிர, கல்வியை அரசியலாக்கவோ அல்லது போலி அறிவியல் மற்றும் பகுத்தறிவற்ற சித்தாந்தங்களை பரப்பவோ யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.