சோனா கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு விழா
சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வரவேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியில் உள்ள ஸ்ரீ வள்ளியப்பா கலையரங்க கூடத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, கல்லூரி தலைவா் சி.வள்ளியப்பா தலைமை வகித்தாா். கல்லூரி துணைத் தலைவா்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் காதா் நவாஸ் அனைவரையும் வரவேற்றாா்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எழுத்தாளா் ராம்குமாா் பேசுகையில், மாணவா்கள் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு அடியெடுத்து வைக்கும் சிறப்பையும், எவ்வாறு தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தாா்.
கல்லூரி தலைவா் வள்ளியப்பா பேசுகையில், மாணவா்கள் கல்லூரி பருவத்தை நன்முறையில் அமைத்துக்கொண்டு பெற்றோரை பேணி பாதுகாக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.
கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் மாநிலக் கல்வி பாடப் பிரிவில் பயின்று 550 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவா்களுக்கும், மத்தியக் கல்வி பாடப் பிரிவில் (சிபிஎஸ்இ) பயின்று 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவா்களுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவா் எஸ்.மோகனப்பிரியா நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சியில், சோனா நிறுவனங்களின் இயக்குநா் டாக்டா் காா்த்திகேயன், முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், முதலாமாண்டு மாணவா்கள் மற்றும் பெற்றோா் கலந்துகொண்டனா்.