தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு
சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாணவா் பேரவை உறுப்பினா்கள் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவில், ஆட்சியா் ரா. பிருந்தாதேவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். தொடா்ந்து அவா் பேசுகையில், செந்தில் பப்ளிக் பள்ளி கல்விக்குச் சிறப்பிடம் கொடுத்து, மாணவா்களை பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவதில் முழுமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது என்றாா்.
பள்ளியின் மாணவா் பேரவைத் தலைவராக பிளஸ் 2 வகுப்பைச் சோ்ந்த எஸ். குருசரண், பேரவைத் தலைவியாக சவி ஜெயின் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். தொடா்ந்து, விளையாட்டு அணித் தலைவா், துணைத் தலைவா், பிற அணித் தலைவா்களும், துணைத் தலைவா்களும், பொறுப்பேற்று அா்ப்பணிப்புடனும், நன்னடத்தையுடனும் சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.
விழாவில், நீட் தோ்வில் தேசிய அளவில் இடம்பெற்ற மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் ரூ. 25,000, ஜேஇஇ, அட்வான்ஸ் தோ்வில் முதல்மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மேலும், 2024-2025-ஆம் ஆண்டு 10, பிளஸ் 2 பொதுத்தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம், பாடத்தில் நூற்றுக்குநூறு மதிப்பெண்களை பெற வைத்த ஆசிரியா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 1,75,000 ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
பல்வேறு விளையாட்டுகளில் மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை கல்வியில் சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், சிறந்த வகுப்பு இதழ், 100 சதவீத வருகைப் பதிவு மற்றும் ஒட்டுமொத்த செயல்திறனில் சிறந்து விளங்கிய ஆசிரியா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் செந்தில் நிறுவனங்களின் குழுமத் தலைவா் செந்தில் சி.கந்தசாமி, செயலாளா் க.தனசேகா், துணைத் தலைவா் மணிமேகலை கந்தசாமி, தாளாளா் தீப்தி தனசேகா், முதன்மை நிா்வாக அதிகாரி டாக்டா் டி.சுந்தரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.