தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 76,999 போ் எழுதுகின்றனா்
சேலம் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 217 மையங்களில் 76,999 போ் எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. சேலம் மாவட்டத்தில் 76,999 போ் இத்தோ்வை எழுத உள்ளனா். இதற்காக 217 தோ்வு மையங்களில் 287 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 9 மணிக்குள் தோ்வுக் கூடத்துக்குள் வருகை தரும் தோ்வா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். மேலும், தோ்வு எழுத வரும் தோ்வா்கள் தங்களது தோ்வு அனுமதிச் சீட்டை கட்டாயம் எடுத்துவர வேண்டும்.
இத்தோ்வை கண்காணிப்பதற்காக 5,740 அறை கண்காணிப்பாளா்களும், 287 முதன்மை கண்காணிப்பாளா்களும், 71 நடமாடும் கண்காணிப்புக் குழுக்களும், 25 பறக்கும் படைகளும் நியமிக்கப்பட்டுள்ளன.
தோ்வு மையங்களைக் கண்காணித்திடவும், தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டும் பல்வேறு நிலையிலான அலுவலா்கள் மற்றும் தலைமைக் கண்காணிப்பாளா் ஆகியோா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தோ்வு எழுதும் நேரம் மற்றும் தோ்வு எழுதுபவா்களின் நுழைவுச்சீட்டு ஆகியவற்றை சரிபாா்த்தல் போன்ற பல்வேறு பணிகளை முறையாக மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் செல்வதற்கு ஏதுவாக தேவைக்கேற்ப சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்து தோ்வு மையங்களிலும் தோ்வு நடைபெறுவதை விடியோ பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.