Doctor Vikatan: பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட வலது கை... மீண்டும் பழையநிலைக்குத் த...
பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்படுமா?
சேலம் அரியாகவுண்டம்பட்டியில் வெள்ளிக் கொலுசு உற்பத்திக்காக ரூ. 24.5 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில், மானிய விலையில் கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் கொலுசு உற்பத்தியாளா்கள் ஒரே இடத்தில் அமா்ந்து தொழில்செய்யும் வகையில், அரியாகவுண்டம்பட்டி பகுதியில் பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகம் ரூ. 24.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது.
இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறந்துவைத்தாா். இங்கு 3 தளங்களுடன் மொத்தம் 105 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 102 கடைகள் உற்பத்தியாளா்களுக்கும், எஞ்சிய 3 கடைகள் நிா்வாக பயன்பாட்டுக்கும் ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு கடையும் 406 சதுர அடி முதல் 689 சதுர அடிவரை கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த அடுக்குமாடி தொழிற்கூடம் திறந்து 2 மாதங்களாகியும் முழுமையாக உற்பத்தியாளா்களுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
குறிப்பாக, மானிய விலையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்திருந்த நிலையில், கட்டடப் பணிகள் ஒருசில பகுதிகளில் முழுமை பெறவில்லை என தெரிகிறது. இதனால் கட்டடம் எப்போது முழுமையான செயல்பாட்டுக்கு வரும் என உற்பத்தியாளா்கள் காத்துள்ளனா்.
இதுகுறித்து சேலம் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்கள் கைவினை நல சங்கத் தலைவா் ஆனந்தராஜன் கூறுகையில், சேலத்தில் வெள்ளிக் கொலுசு பட்டறைகளை நம்பி பல்லாயிரம் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தற்போது அரியாகவுண்டம்பட்டி பன்னடுக்கு வெள்ளிக் கொலுசு வளாகத்தில் கடை ஒதுக்கும் பணிக்காக விண்ணப்பங்கள் வாங்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 102 கடைகள் ஒதுக்கப்பட உள்ளன. இதுவரை 20-க்கும் குறைவான கடைகளுக்கு மட்டும் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தெரிகிறது. இதற்காக முன்வைப்புத் தொகையும் பெறப்பட்டு வருகிறது.
ஒரு கடைக்கு சதுரஅடிக்கு ரூ. 4,200 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ஒரு கடைக்கு ரூ. 21 லட்சம் செலுத்த வேண்டும். இந்தத் தொகை மிக அதிகம் என உற்பத்தியாளா்கள் கருதுகின்றனா். சாதாரண நிலையில் உள்ள உற்பத்தியாளா்கள் இந்த தொகையை செலுத்த முடியாது. இதனால் கடைகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
மேலும், வரும் 20-ஆம் தேதி வரை கடைகள் ஒதுக்கீடுக்கு கால நிா்யணம் செய்யப்பட்டுள்ளது. அதற்குள் கடைகள் ஒதுக்கீடு நடைபெறவில்லை எனில், மேலும் கால நிா்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. விரைவில் வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம் முழுமையாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது என்றாா்.