ஜகதீப் தன்கரின் ராஜிநாமா ஏற்பு!
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் ராஜிநாமாவை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி, ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக குடியரசு தலைவருக்கு ஜகதீப் தன்கர் திங்கள்கிழமை இரவு கடிதம் அனுப்பினார்.
மேலும், அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) -ன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ராஜிநாமாவை ஏற்க வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஜகதீப் தன்கரின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்றுக்கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முறைப்படி அனுப்பியதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை கூடியது. மாநிலங்களவை கூட்டத்தொடருக்கு வழக்கம்போல் ஜகதீப் தன்கர் தலைமை தாங்கிய நிலையில், இரவு ராஜிநாமா செய்திருப்பது எதிர்க்கட்சி எம்பிக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய கூட்டத்தொடரில் அனைத்து உறுப்பினர்களுடனும் ஜகதீப் தன்கர் சகஜமாக பேசியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மத்திய அரசுக்கும் ஜகதீப் தன்கருக்கும் இடையேயான உறவு சுமுகமாக இல்லை என்றும் அவர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஒரு அமைச்சர்கூட பங்கேற்கவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
2027 வரை குடியரசு துணைத் தலைவரின் பதவிக் காலம் இருக்கும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜகதீப் தன்கர் ராஜிநாமா செய்துள்ளார்.
இதையடுத்து, விரைவில் குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.