நெல்லையில் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார் முதல்வர்!
ஜகபர் அலி கொலை வழக்கு: குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த மங்களூருவைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. அ.தி.மு.க-வில் சிறுபான்மை பிரிவில் ஒன்றிய பொறுப்பு வகித்து வந்த இவர், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். அந்தப் பகுதிகளில் நடந்து வந்த கனிமவளக் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 17-ம் தேதி இவர் 407 மினி லாரி ஏற்றி கொலைசெய்யப்பட்டார்.
கொலைசெய்யப்பட்ட ஜகபர் அலியின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் ஆர்.ஆர் குரூப்ஸ் குவாரியின் உரிமையாளர்கள், ராசு, ராமையா ராசு மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் உள்ளிட்ட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சரியாக விசாரிக்காத திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதோடு, இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஐந்து பேரையும் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று மறுபடியும் குற்றவாளிகள் ஐந்து பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த இருக்கின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேரின் வீடுகளில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டனர். சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் திடீர் ஆய்வு மேற்கொண்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.