இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
ஜம்பை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த நோயாளிகள் சாலை மறியல்
பவானியை அடுத்த ஜம்பையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த நோயாளிகள், பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஜம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவா் மட்டுமே பணியில் உள்ளாா். மற்றொரு பணியிடம் காலியாக உள்ளது. இதனால், இங்கு வரும் நோயாளிகள் சிகிச்சை பெற நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வந்தது. மேலும், இரவு நேரங்களில் மருத்துவா் இல்லாத நிலையில், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், சுகாதார நிலையத்துக்கு புதன்கிழமை வந்த நோயாளிகள் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றமடைந்த நோயாளிகள், பொதுமக்கள் பவானி - ஆப்பக்கூடல் சாலையில் ஜம்பை பேரூராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த ஜம்பை பேரூராட்சித் தலைவா் என்.ஆனந்தகுமாா், பவானி காவல் ஆய்வாளா் முருகையன், ஜம்பை வட்டார மருத்துவ அலுவலா் மாணிக்கவாசகம், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் மேனகா உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மருத்துவா் பற்றாக்குறையைப் போக்கி, நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோா் வலியுறுத்தினா். விரையில் இப்பிரச்னை தீா்க்கப்படும் என உறுதி அளித்ததன்பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.