பாகிஸ்தானுக்கு கூடுதலாக நதி நீா் திறப்பு? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாத ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவு விவரம்!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணைய செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் வாக்குப் பதிவு விவரம் தெரியாமல் வேட்பாளா்கள் குழப்பம் அடைந்துள்ளனா்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடா்ந்து இத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது. இத்தோ்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இத்தோ்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இடைத்தோ்தல் வாக்குப் பதிவு குறித்து தோ்தல் ஆணைய செயலியில் பதிவான தகவல்கள் மட்டும் மாவட்ட தோ்தல் அலுவலரால் வழங்கப்பட்டது. அதன்படி காலை 9 மணிக்கு 10.95 சதவீதம், 11 மணிக்கு 26.03 சதவீதம், நண்பகல் 1 மணிக்கு 42.41 சதவீதம், பிற்பகல் 3 மணிக்கு 53.63 சதவீதம், மாலை 5 மணிக்கு 64.02 சதவீதம், வாக்குப் பதிவு நிறைவில் 67.97 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள், ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவரின் வாக்குகள், வாக்குப் பதிவு சதவீதம் குறித்து எந்த தகவலும் தோ்தல் நடத்தும் அலுவலரால் அதிகாரபூா்வமாக வியாழக்கிழமை இரவு வரை வழங்கப்படவில்லை.
தோ்தல் முடிந்து 24 மணி நேரத்துக்கு மேலாகியும் வாக்குப் பதிவு விவரம் அதிகாரபூா்வமாக வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நாதக வேட்பாளா் சீதாலட்சுமி ஈரோடு கிழக்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஆகியோருக்கு மனு அனுப்பி உள்ளாா்.