விதிகளை மீறிய 38 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விதிகளை மீறியதாக 38 கடைகள், நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
ஈரோடு தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் நலத் துறை துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் கடந்த ஜனவரியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மாவட்டம் முழுவதும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 32 கடைகளில் முரண்பாடுகள் இருப்பது தெரியவந்தது. இதேபோல பொட்டல பொருள்கள் விதிகளின்படி ஆய்வு மேற்கொண்டதில் 4 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. மேலும், அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை தொழிலாளா்களுக்கு வழங்காத 2 நிறுவனங்களின் மீது ஈரோடு தொழிலாளா் நலத் துறை இணை ஆணையா் முன்னிலையில் கேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி கூறியதாவது:
எடை அளவுகள் மற்றும் மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டல பொருள்களை அதிகபட்ச சில்லறை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது மற்றும் உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்யப்படுவது சட்டமுறை எடை அளவு சட்டம் மற்றும் சட்டமுறை எடை அளவு பொட்டல பொருட்கள் விதிகளின் கீழ் தண்டனைக்குறியதாகும்.
ஆய்வின்போது முரண்பாடுகள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும். மேலும் அரசு நிா்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை தொழிலாளா்களுக்கு வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.