திருநெல்வேலி: ரோடு ஷோ முதல் இருட்டுக்கடை அல்வா வரை... நெல்லையில் முதல்வர் ஸ்டாலி...
சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் ரூ.1.48 கோடி உதவித்தொகை வழங்கல்
சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 375 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் 25-ஆவது ஐம்பெரும் விழா ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு வேளாளா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகரின் மனைவி லோகலட்சுமி சந்திரசேகா் விழாவைத் தொடங்கிவைத்தாா்.
சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவா் பி.சி. துரைசாமி வரவேற்றாா். ஈரோடு எஸ்கேஎம் குழும நிறுவனங்கள் தலைவா் மயிலானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ஈரோடு வேளாளா் கல்வி நிறுவனங்கள் செயலாளா் மற்றும் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகருக்கு சக்திதேவி அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளா் விருதை வழங்கினாா்.
விழாவில் கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநா் கவிதாசன், லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவா் என்.முத்துசாமி, ஈரோடு பாரதி வித்யாபவன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளா் எல்.எம்.ராமகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.
2023-24 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளி அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சேவை அமைப்புகளுக்கு உதவித்தொகை என மொத்தம் ரூ.1 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 375 வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை சாந்தி துரைசாமி, டி.செந்தில்குமாா், தீபா செந்தில்குமாா், எம்.இளங்கோ, ஜி.வேணுகோபால் மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.