பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் க...
ஜம்மு-காஷ்மீர்: சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய விடுதிகள்!
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 26 பேர் கொல்லப்பட்டனர். இதன் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக அந்த யூனியன் பிரதேசத்தில் பல்வேறு முக்கிய சுற்றுலா தலங்களிலும் இந்த கோடை காலத்தில் வழக்கத்திற்கு மாறாக ஆள்நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது.
இதையும் படிக்க:சொல்லப் போனால்.. பஹல்காமின் இருளும் ஒளியும்!
ஜம்முவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான பட்னீடாப் பகுதியில் பெரும்பாலான தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா தொழிலை நம்பி வாழ்க்கை நடத்தும் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, பட்னீடாப்பிலுள்ள விடுதி உரிமையாளர் ஒருவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது: “பட்னீடாப் வெறிச்சோடி கிடக்கிறது. பஹல்காமில் நடந்ததைப் போல, பட்னீடாப்பில் இதுவரை அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை. இதற்கு கடவுளுக்குத்தான் நன்றி தெரிவிக்க வேண்டும். எனினும், காவல்துறையும், பாதுகாப்பு படைகளும் இங்கு ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
ஏப்ரல் தொடக்கத்தில் பட்னீடாப்பிலுள்ள அனைத்து ஹோட்டல்களிலும் 80 சதவீதம் அறைகள் நிரம்பியிருந்தன. ஆனால், இப்போது இங்கு யாருமே இல்லாத நிலை உள்ளது. ஒட்டுமொத்த பட்னீடாப்பும் காலியாக இருப்பதை பார்க்க முடிகிறது.
இந்நேரத்தில் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். பட்னீடாப் முழுக்க முழுக்க பாதுகாப்பானதொரு பகுதியாகும். ஆகவே, யாரும் பயப்பட வேண்டாம். மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இப்பகுதியில் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளனர்” என்றார்.