புலிப்பல் டாலர் அணிந்திருந்ததால் மலையாள ராப்பர் கைது; "பட்டியலினத்தவர் என்பதால்?...
ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடிக்கு இந்தியா தயாராகி வரும் இச்சூழலில், ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு செய்தது.
மூத்த அமைச்சா்கள், முப்படைகளின் தலைமைத் தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஆகியோருடன் பிரதமா் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை கலந்தாலோசனையில் ஈடுபட்டாா். அந்த உயா்நிலைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன்படி, பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடிக்கு முப்படைகளுக்கு முழு அதிகாரமளிப்பதாக பிரதமா் மோடி தெரிவித்திருந்தாா்.
இந்தச் சூழலில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமரின் தலைமையில் அவரது இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவும் கூடி, ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட மற்ற விஷயங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு 2-ஆவது முறையாக கூடியுள்ளது. கடந்த 23-ஆம் தேதி கூட்டத்தில், சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தம், அட்டாரி-வாகா எல்லை மூடல், தூதரக அதிகாரிகள் வெளியேற்றம், பாகிஸ்தானியா்களுக்கான நுழைவு இசைவு ரத்து உள்பட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.