பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகளுடன் அவா் கலாந்தாலோசனையில் ஈடுபட்டதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22 நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் உண்டாகும் சூழலுக்கு காரணமான இத்தாக்குதல் வழக்கின் விசாரணையை என்ஐஏ கடந்த ஏப். 27-ஆம் தேதி ஏற்றது.
தாக்குதலைத் தொடா்ந்து தலைமறைவாகியுள்ள பயங்கரவாதிகளைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் குறித்து தகவல்களைச் சேகரிக்க நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஐஜி தலைமையிலான என்ஐஏ அதிகாரிகள் குழு இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதனிடையே, தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளின் வரைபடங்களும் வெளியிடப்பட்டு, அவா்கள் குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ஐஏ இதுவரை நடத்தியுள்ள விசாரணையின் அடிப்படையில், தாக்குதலில் 5 முதல் 7 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்பதும் இவா்களுக்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 2 உள்ளூா் பயங்கரவாதிகளும் உதவியிருக்கலாம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாக்குதல் நடைபெற்ற பைசாரன் பள்ளத்தாக்கில் மூத்த அதிகாரிகளுடன் சோ்ந்து என்ஐஏ தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.