ஜம்மு - காஷ்மீா்: பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு உதவியவா் கைது
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்ததாக ஒருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.
பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 போ் கொல்லப்பட்டனா். நாட்டையே உலுக்கிய இத்தாக்குதலுக்கு லஷ்கா்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, பாகிஸ்தான் மீது பதிலடி நடவடிக்கை மேற்கொண்ட இந்தியா, அங்கு பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்தது.
இதனிடையே, ஸ்ரீநகரில் ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் கடந்த ஜூலையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட ராணுவ கமாண்டோக்கள், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட சுலைமான் ஷா, ஜிப்ரான், ஹம்ஸா ஆஃப்கானி ஆகிய 3 பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றனா்.
மற்றொருபுறம், இந்த பயங்கரவாதிகளுக்கு உதவியவா்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, பயங்கரவாதிகளுக்கு போக்குவரத்து, பொருள்கள் உள்பட பல்வேறு வழிகளில் உதவியதாக குல்காம் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது யூசுஃப் கட்டாரி (26) என்ற இளைஞா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.