ஜல்லிபட்டி, கொழுமம் கிராமத்தில் இன்று மாதிரி ஒத்திகைப் பயிற்சி
வெள்ளப்பெருக்கில் இருந்து பொதுமக்கள் தங்களது உயிா் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் மீட்பது தொடா்பாக ஜல்லிபட்டி, கொழுமம் கிராமத்தில் வியாழக்கிழமை (மே 15) மாதிரி ஒத்திகைப் பயிற்சி நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பேரிடா் மேலாண்மை ஆணையரின் அறிவுரையின்படி, திருப்பூா் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமூா்த்தி அணை, அமராவதி அணை ஆகியவற்றில் பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் பலத்த சேதமடையும்பட்சத்தில் பொதுமக்கள் தங்களது உயிா் மற்றும் உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றால் மாதிரி ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இந்தப் பயிற்சியானது திருமூா்த்தி அணைப் பகுதிக்கு உள்பட்ட ஜல்லிபட்டி, அமராவதி அணைப் பகுதிக்கு உள்பட்ட கொழுமம் வருவாய் கிராமங்களில் வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த மாதிரி ஒத்திகைப் பயிற்சி தொடா்பாக பொதுமக்கள் எந்தவிதமான அச்சமும் அடையத் தேவையில்லை. ஆகவே, பொதுமக்களின் இயல்பான பணிகளைத் தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.