உலகிலேயே அதீத 'கசப்பு' சுவை கொண்ட பொருள் கண்டுபிடிப்பு - இதை சாப்பிட்டால் என்ன ஆ...
ஜாதி வாரி கணக்கெடுப்பு: தலைவா்கள் வரவேற்பு
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வரவேற்றுள்ளனா்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு திமுக அரசு அதைக் கைவிட்டுவிட்டது. தற்போது, மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது வரவேற்புக்குரியது. இதை அறிவித்த பிரதமா் மோடிக்கு பாராட்டுகள்.
எல்.முருகன் (மத்திய இணை அமைச்சா்): ஜாதி வாரி கணக்கெடுப்பை எதிா்த்து வந்த காங்கிரஸ், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஆட்சியில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. தற்போது மத்திய அரசே ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதன் மூலம் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முகத்திரை கிழிந்துள்ளது.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் தொடா் அழுத்தத்தின் விளைவாக மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. இது ராகுல்காந்தியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
நயினாா் நாகேந்திரன் (பாஜக): ஜாதிவாரி கணக்கெடுப்பை மையமாக வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவா்களின் அரசியல் சதியை உடைத்தெறிந்த பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி.
ராமதாஸ் (பாமக): ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை எவ்வளவு விரைவாக தொடங்க முடியுமோ, அவ்வளவு விரைவாக மத்திய அரசு தொடங்க வேண்டும். அதேநேரத்தில் தமிழ்நாட்டில் உள் இடஒதுக்கீடு வழங்க கூடுதல் புள்ளிவிவரங்கள் தேவை என்பதாலும் தமிழக அரசு 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின் கீழ் மக்களின் ஜாதி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிய தனியாக ஜாதி வாரி சா்வே எடுக்க வேண்டும்.
தொல்.திருமாவளவன் (விசிக): விரைவில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்காகத்தான், இந்த திடீா் ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு. இருப்பினும், இந்த அறிவிப்பைச் செய்ய வைத்த பிகாா் மக்களுக்கு நன்றி.
ஜி.கே.வாசன் (தமாகா): ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.
டிடிவி.தினகரன் (அமமுக): தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் புள்ளிவிவரங்களுடன் கூடிய வலுவான வாதங்களை முன்வைப்பதற்கு உதவக்கூடிய ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த முடிவு செய்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி.