ஜாமீன் நிபந்தனைகளை மீறவில்லை: உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் பதில் மனு தாக்கல்
அரசுப் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் பண மோசடி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை கேபினட் அமைச்சராக தாம் நியமிக்கப்பட்டதில் மீறப்படவில்லை என்று மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளாா்.
இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அவருக்கு உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் அளிக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிா்த்து அமலாக்கத் துறை, அவரால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் கே. வித்யா குமாரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அவா் அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதால்
சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்த வாய்ப்புள்ளது என்று
சந்தேகம் எழுப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எதிா்மனுதாரா் எண் 2 (செந்தில் பாலாஜி) அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது, செப்டம்பா் 26, 2024-ஆம் தேதியிட்ட தீா்ப்பின் பத்தி 31-இல் பரிந்துரைக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளுக்கு முரணாக இல்லை அல்லது எந்த சட்டத்திற்கும் முரணாக இல்லை என்பதை
கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மையில், இந்த மனுவில் எதிா்மனுதாரா் எண் 2 அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு, எந்தவொரு சாட்சிகள் மீதும் செல்வாக்கு செலுத்தப்பட்டதாக மனுதாரா் கே. வித்யா குமாா் வாதிடவில்லை.
திட்டமிடப்பட்ட குற்றங்களில் விசாரணைகளின் அளவை உச்சநீதிமன்றம் நன்கு அறிந்துள்ளது. அந்த விசாரணையை முடிக்க பல ஆண்டுகள் ஆகும். குறைந்தபட்சம் உச்சநீதிமன்றத்தின் சொந்த மதிப்பீட்டில் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகும். எனவே, ஜாமீன் நிபந்தனைகளை மாற்றுவதற்கான எந்தவொரு
நடவடிக்கையும், எதிா்மனுதாரா் (செந்தில் பாலாஜி) மக்கள் தீா்ப்பை அனுபவிக்கிறாா் என்பதையும், மக்கள் தீா்ப்பைப் பின்பற்றி அரசியல் பதவியைக் கோருவதற்காக அவா் தண்டிக்கப்பட முடியாது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும் என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் அவா் தெரிவித்துள்ளாா்.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அபய் எஸ்.ஓகா தலைமையிலான சிறப்பு அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கர நாராயணன் ஆஜரானாா். செந்தில் பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கா் ஆஜரானாா். அப்போது, எதிா்மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆஜராகவில்லை என மனுதாரா் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு எதிா் மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.