ஜார்க்கண்ட்: "என்னைக் காணவில்லையா?" - 'காணவில்லை' போஸ்டருடன் வந்து புகாரளித்த இளைஞர்; என்ன நடந்தது?
ஜார்க்கண்ட் மாநிலம், சத்ரா மாவட்டத்தில் உள்ள ஹன்டர்கஞ்ச் காவல் நிலையத்தில் ஒரு வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
கெருவா கிராமத்தைச் சேர்ந்த முகமது இர்ஷாத் என்பவர், தன்னைக் காணவில்லை எனக் கூறி பொய்யான புகைப்பட போஸ்டர்களை வெளியிட்டுள்ளதாகப் புகார் அளித்துள்ளார்.
அந்த போஸ்டருடன் காவல் நிலையத்திற்கு வந்த இளைஞரைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் விசாரித்தபோது தன்னைக் காணவில்லை எனக் கூறி பொய்யான போஸ்டர்களை வெளியிட்டு, ஒரு கும்பல் துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முகமது இர்ஷாத் தனது புகாரில், கடந்த இரண்டு மாதங்களாகச் சில இளைஞர்கள் தன்னைத் தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டை விட்டு வெளியே சென்றபோது, கிராமத்தின் பொது இடங்களிலும், கடைகளிலும் தனது புகைப்படத்துடன் கூடிய "காணவில்லை" என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார்.
இந்த போஸ்டர்களில், இர்ஷாத் கடந்த ஜூலை 5-ஆம் தேதி முதல் காணவில்லை என்றும், அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் துன்புறுத்தலுக்குப் பின்னால், தன்னைத் தொடர்ந்து கேலி செய்யும் இளைஞர்களே இருப்பதாக இர்ஷாத் குற்றம் சாட்டியுள்ளார்.
இர்ஷாத் அனைத்து போஸ்டர்களையும் அகற்றியிருந்தாலும், அவருக்கு எதிரான துன்புறுத்தல் நிற்கவில்லை. சந்தைக்குச் செல்லும்போது இளைஞர்கள் அவரைக் கேலி செய்வதுடன், கற்களை வீசி தாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, நமாஸ் தொழுகைக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அவரது மனைவிக்கு எதிராகவும் தவறாக நடந்து கொண்டதாக இர்ஷாத் குறிப்பிட்டுள்ளார். முகமது ஆதில், முகமது சோட்டு, முகமது ஆசாத், முகமது சைஃப் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார் இர்ஷாத்.
இந்தத் தொடர் துன்புறுத்தலால் தனக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக இர்ஷாத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் புகார் குறித்து ஹன்டர்கஞ்ச் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.