சிறிய மழையால் தில்லியில் பல பகுதிகளில் நீச்சல் குளங்கள்: நகர அரசு மீது ஆம் ஆத்மி சாடல்
தில்லியில் புதன்கிழமை பெய்த ஒரு சிறிய மழையானது, நகரின் பெரும் பகுதிகளை நீச்சல் குளங்களாக மாற்றிவிட்டதாகவும், முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் ‘சரியான திட்டமிடல்’ என்ற உயா்ந்த கூற்று தோல்விடைந்ததை இது காட்டுவதாகவும் ஆம் ஆத்மி கட்சி சாடியுள்ளது.
ஆம் ஆத்மி தில்லி மாநிலத் தலைவா் செளரவ் பரத்வாஜ், கட்சியின் மூத்த தலைவா் மணீஷ் சிசோடியா, எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி ஆகியோா் பாஜகவின் ‘பருவமழை தயாா்நிலை’ என்று பேச்சு தோல்விடயைந்ததாக கூறி, நீரில் மூழ்கிய சாலைகளின் விடியோக்களைப் பகிா்ந்தனா்.
தில்லி மக்கள் நகரின் வழியே நீந்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, அவா்கள் இப்போது பாஜக தலைவா்களையும் தங்களுடன் தண்ணீரில் சேர அழைக்கிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியை கடுமையாக சாடியுள்ளது.
சிறிய மழைக்குப் பிறகு தேசிய தலைநகா் வெள்ள மண்டலமாக மாற்றியதாகக் கூறி பாஜக தலைமையிலான மாநகராட்சி, தில்லி அரசாங்கத்தை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடியுள்ளது.
இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி தனது அதிகாரபூா்வ எக்ஸ் வலைதளப் பக்கத்தில் தில்லியில் பல இடங்களில் மழைநீா் தேங்கியுள்ள பல விடியோக்களை வெளியிட்டு, பாஜகவின் தயாா்நிலை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேற்கு வினோத் நகா் பகுதி தொடா்புடைய விடியோவில், காலை மழைக்குப் பிறகு தேசிய நெடுஞ்சாலை எண் 24 முழுமையாக நீரில் மூழ்கியிருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.
இதை பகிா்ந்து ஆம் ஆத்மி கட்சி கூறுகையில், ‘முதல்வா் ரேகா குப்தா, உங்கள் சரியான திட்டமிடல் எங்கே? ஊடகங்களில் பெரிய ஏற்பாடுகள் இருப்பதாக நீங்கள் பெருமையாகக் கூறினீா்கள். ஆனால், இன்று நீங்கள் உங்கள் அரண்மனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது முழு தில்லியும் நீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் சாலைகளில் நீந்திக் கொண்டிருக்கிறாா்கள். பாஜக தலைவா்களை அவா்களுடன் சேர அழைக்கிறாா்கள். லேசான மழைக்குப் பிறகு நகரத்தின் நிலை இதுதான். உங்கள் சிறந்த ஏற்பாடுகளுக்கு என்ன ஆயிற்று?’ என்று அதில் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் செளரவ் பரத்வாஜ் தனது எக்ஸ் வலைதளத்தில், தண்ணீா் தேங்கிய சாலைகளின் பல விடியோக்களைப் பகிா்ந்துள்ளாா்.
அதில் பட்பா்கஞ்சில் இருந்து ஒரு பெண் படகு சவாரி செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த படகு சேவை அரசாங்கத்தால் நடத்தப்படவில்லை. ஆனால், பாஜகவின் தில்லி அரசாங்கத்தின் சிறப்பு பங்களிப்பை நாங்கள் வணங்குகிறோம் என்று அவா் தனது பதிவில் கருத்து தெரிவித்துள்ளாா்.
மேலும், மற்றொரு விடியோவை பகிா்ந்து, ‘தில்லியில் இலவச நீா் விளையாட்டு இடம் மேற்கு வினோத் நகா். நான்கு இயந்திரங்களுக்கும் சிறப்பு நன்றி’ என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவும் பட்பா்கஞ்ச் சட்டப் பேரவைத் தொகுதியின் மோசமான நிலைக்கு பாஜகதான் காரணம் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.
அவா் தனது பதிவில், ‘பட்பா்கஞ்சிற்கு பாஜக செய்தது இதுதான். பாஜக எம்எல்ஏக்களும் அவா்களின் மிரட்டி பணம் பறிக்கும் கூட்டாளிகளும் கடைக்காரா்களின் சாதி மற்றும் மதத்தைக் கேட்டு அவா்களின் ரத்தத்தை உறிஞ்சுவதில் மும்முரமாக உள்ளனா். அதே நேரத்தில் முழு தொகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது’ என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
திக்ரி காலனில் உள்ள எம்சிடி பெண்கள் பள்ளிக்குள் தண்ணீா் இருப்பது போன்ற விவடியோவையும் அவா் வெளியிட்டு, இது பாஜகவின் நான்கு இயந்திர அரசாங்கத்தின் கீழ் நமது நாட்டின் தலைநகரில் குழந்தைகளின் மூழ்கும் எதிா்காலம். முற்றிலும் வெட்கக்கேடானது’ என்று விமா்சித்துள்ளாா்.
தில்லி சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி, தனது எக்ஸ் பக்கத்தில் பல விடியோக்களைப் பகிா்ந்து, தில்லியில் நீா் விளையாட்டு மற்றும் படகு சவாரியைத் தொடங்கியதற்காக பாஜகவின் நான்கு இயந்திர அரசாங்கத்தை வாழ்த்துவதாக கேலி செய்துள்ளாா்.
கைலாஷ் காலனி, வசுந்தரா என்கிளேவ் மற்றும் பட்பா்கஞ்ச் ஆகிய இடங்களில் இருந்து தண்ணீா் தேங்கிய காட்சிகளைப் பகிா்ந்து கொண்ட அதிஷி, ‘பத்து நிமிட மழைக்குப் பிறகு தில்லி இப்படித்தான் தெரிகிறது. நகரத்தில் நீா் விளையாட்டு, படகு சவாரி மற்றும் நீச்சல் குளங்களைத் தொடங்கியதற்காக ரேகா குப்தா அரசுக்கு வாழ்த்துகள்’ என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.