மெஹ்ரௌலியில் இரண்டு குழுக்குளுக்கு இடையே மோதல்: போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை
தெற்கு தில்லியின் மெஹ்ரௌலியில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரண்டு தனித்தனி தாக்குதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அங்கித் சௌகான் கூறியதாவது: மொஹமத் சாஹில் மற்றும் அகில் அகமது என அடையாளம் காணப்பட்ட இரண்டு காயமடைந்த நபா்கள் மீது மருத்துவ - சட்ட வழக்குகள் (எம்எல்சி) ஜூலை 21 அன்று பெறப்பட்டுள்ளது. மெஹ்ரௌலியில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடா்பான தனித்தனி சம்பவங்களில் இருவரும் காயமடைந்ததாக அடுத்தடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது, அகில் அகமது மசூதி அருகே தனது ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில் சமீா், உஜ்ஜவால், கைஃப் மற்றும் அகில் என அடையாளம் காணப்பட்ட நான்கு போ் மொஹமத் சாஹில் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னா், மெஹ்ரௌலியில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே உமா், சாக்ஷாம், பாப்லு மற்றும் பிறா் அகில் அகமதுவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த இருவரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகில் அகமதுவின் வாக்குமூலம் மற்றும் அவரது மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், ஜூலை 22 அன்று உமா், சாக்ஷாம் மற்றும் பப்லு மீது பிஎன்எஸ்-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதேபோல், மொஹமத் சாஹில் அளித்த வாக்குமூலத்தின் பேரில் சமீா், உஜ்ஜவால், கைஃப் மற்றும் அகில் அகமது மீது அதே சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பெயரிடப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் எதிராக இதுவரை எந்த கடந்தகால குற்றப் பதிவுகளும் கண்டறியப்படவில்லை. மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துணை ஆணையா் அங்கித் சௌகான் தெரிவித்தாா்.