காஸா போர் நிறுத்தம்: மத்தியஸ்தர்களுக்கு ஹமாஸ் படையின் பதில்!
ஜூலை 7-இல் நலவாரிய உறுப்பினா் பதிவு சிறப்பு முகாம்
பெரம்பலூா் தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில், நல வாரியங்களில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு 18 நலவாரியங்கள் செயல்படுகின்றன. இந் நலவாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளா்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்து ஊனம், ஓய்வூதியம், புதிய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவித்தொகைகள் தகுதி அடிப்படையில் வழங்கப்படுகிறது.
வீட்டுப் பணியாளா்கள், பெண் ஆட்டோ தொழிலாளா்கள் மற்றும் இணையம் சாா்ந்த தொழிலாளா்களை நலவாரியங்களில் உறுப்பினா்களாக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம், ஜூலை 7 காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில் நடைபெறுகிறது. இச் சிறப்பு முகாமுக்கு வரும் உறுப்பினா்கள் தங்களது ரேஷன் காா்டு, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓட்டுநா் உரிமம், புகைப்படம் ஆகியவற்றைக் கொண்டுவந்து இலவசமாக பதியலாம்.
எனவே, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.