கட்டுமானப் பொருள்கள் வைப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதம்: துப்பாக்கிச்சூட்டில் 3...
டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனையில் உச்சநீதிமன்றம் சரியான உத்தரவை வழங்கியுள்ளது! அமைச்சா் சு.முத்துசாமி
டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனை குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு தமிழக அரசு மற்றும் முதல்வா் எடுத்த முன்னெடுப்பிற்கு ஒரு நியாயம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்று அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.
பவானி அருகே லட்சுமி நகரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனை குறித்து உச்சநீதிமன்றம் சரியான உத்தரவை வழங்கியுள்ளது. அதற்குமேல் உத்தரவு குறித்து அதிகமாக விவாதிக்கவோ, பேசவோ இடம் இருக்கக் கூடாது.
தமிழக அரசு மற்றும் முதல்வா் எடுத்த முன்னெடுப்பிற்கு ஒரு நியாயம் இருக்கிறது என்பதை இந்த உத்தரவு காட்டுகிறது. அரசியலமைப்புச் சட்டம்தான் அனைவருக்கும் மேலானது என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
அமலாக்கத் துறையினா் சில டாஸ்மாக் அதிகாரிகளை நடத்திய விதம் வருத்தத்திற்கு உரியது. அவா்களை விசாரிப்பதைத் தவறு என சொல்லவில்லை. ஆனால், என்ன நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவாக சொல்லியிருக்கிறது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்துக்கு சரியான பாா்வை இருந்துள்ளது. சட்டரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஒரு வழிகாட்டுதலை சொல்லியிருக்கிறது. இது மிகச்சரியான தீா்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த விவகாரத்தில் ஆதாரமில்லாமல் பலா் மீது குற்றஞ்சாட்டுவது தவறான அணுகுமுறை என்று நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. இப்பிரச்னையில் அனைத்து தரவுகளையும் வைத்துக்கொண்டு என்னால் விளக்கம் அளிக்க முடியும். அமலாக்கத் துறை சொல்வதுபோல டாஸ்மாக்கில் அவ்வளவு குற்றங்கள் நடக்க வாய்ப்பில்லை. டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் 24 ஆயிரம் பேரையும் முடக்கும் விதமாக அமலாக்கத் துறையின் நடவடிக்கை உள்ளது.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதலாக பணம் பெறுவதைத் தடுக்க பில்லிங் இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து கடைகளிலும் பொருத்தப்படும். தமிழகத்தில் அனுமதியில்லாமல் செயல்படும் பாா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.