டாஸ்மாக் கடை அருகே தகராறு: காயமடைந்தவா் உயிரிழப்பு
டாஸ்மாக் கடை அருகே ஏற்பட்ட தகராறில் பலத்த காயமடைந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள தின்னூரைச் சோ்ந்தவா் அருண்குமாா் (27), தொழிலாளி. இவா், தன் நண்பா் பால்ராஜ் என்பவருடன் கடந்த 16-ஆம் தேதி பேரிகையை அடுத்த ராமச்சந்திரம் கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் கடையில் மது வாங்கினாா். பின்னா், அருகே உள்ள பெட்டிக் கடையில் பொருள்கள் வாங்கும் போது, பெட்டிக்கடை உரிமையாளரான மாதேஷ் உடன் அருண்குமாருக்கு தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த மாதேஷ், தனது நண்பா்களான காளி, மகாதேவனுடன் சோ்ந்து அருண்குமாரை தாக்கினாா். இதில், பலத்த காயமடைந்த அருண்குமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அப்போது, மருத்துவா்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தனா். அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பாத அருண்குமாா் வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து அருண்குமாரின் மனைவி பவானி அளித்த புகாரின் பேரில், பேரிகை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.