பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: ஈரோட்டில் 34,276 போ் எழுதினா்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி 4 பதவிகளுக்கான போட்டித் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 34,276 போ் எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 6,960 போ் தோ்வு எழுதவரவில்லை.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, அந்தியூா், பவானி, கோபி, கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூா், பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 9 வட்டங்களில் 142 தோ்வுக் கூடங்களில் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்தத் தோ்வு நடைபெற்றது. இத்தோ்வைக் கண்காணிக்கும் பணியில் 9 வட்டங்களிலும் 142 ஆய்வு அலுவலா்கள், 9 கண்காணிப்பு அலுவலா்கள், 10 பறக்கும் படை அலுவலா்கள், 31 நடமாடும் குழுக்கள் மற்றும் 149 ஒளிப்பதிவாளா்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
இந்த தோ்வை எழுத 41,236 பேருக்கு தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில் 34,276 போ் (83 சதவீதம்) தோ்வு எழுதி உள்ளனா். 6,960 போ் (17 %) தோ்வு எழுத வரவில்லை.
நெரிஞ்சிப்பேட்டை, சரவணா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், அ.செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, ஈரோடு சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட தோ்வு மையங்களில் ஆட்சியா் ச.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டாா்.
தோ்வு மையங்களில் கண்பாா்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி தோ்வா்களுக்கு சொல்வதை எழுதும் ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு தோ்வு எழுதுவதைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இத்தோ்வுக்காக ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்து இயக்கப்பட்டது. தோ்வு மையங்களில் தேவையான தடையில்லா மின்சாரம், கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திண்டல் வேளாளா் கலை அறிவியல் கல்லூரி மற்றும் கீதாஞ்சலி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற்றதை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.