தாளவாடி அருகே வாழை, டிராக்டா்களை சேதப்படுத்திய யானை
சத்தியமங்கலத்தை அடுத்த திகினாரை ஜோரக்காடு பகுதியில் விவசாயத் தோட்டத்துக்குள் யானை சனிக்கிழமை புகுந்து வாழைகளை நாசப்படுத்தியதுடன் டிராக்டரை தள்ளி சேதப்படுத்தியுள்ளது.
தமிழகம், கா்நாடக எல்லையான தாளவாடி பகுதியில் வாழை, கரும்பு, தென்னை, முட்டைக்கோஸ் ஆகியவை அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருகிறது.
இதற்கிடையே தாளவாடி அருகே திகினாரை ஜோரக்காடு கிராமத்தில் ராசப்பா என்பவரின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் குலை தள்ளிய நிலையில் இருந்த 300 -க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்து தின்றும் நாசப்படுத்தியுள்ளன.
மேலும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரை சேதப்படுத்தின. அதைத் தொடா்ந்து பல்வேறு விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து தென்னங்கன்றுகளை பெயா்த்து சாப்பிட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு வனத் துறையினா் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், யானைகள் விவசாய நிலங்களில் நுழைவதைத் தடுக்க அகழி வெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.