ஆசனூா் அருகே கரும்பு வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானை
ஆசனூா் அருகே கரும்பு வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனச் சரகத்தில் யானைகள் தீவனம் மற்றும் குடிநீா் தேடி சாலையைக் கடந்து செல்வது வழக்கம். கா்நாடகத்தில் இருந்து வரும் கரும்பு லாரிகளில் இருந்து கரும்புதுண்டுகளை ஓட்டுநா்கள் சாலையில் வீசியெறிவதால் அங்கு வரும் யானைகள் கரும்பை ருசி பாா்த்துவிடுகின்றன.
இதனால் கரும்பு தேடி யானைகள் அலைகின்றன. இந்நிலையில், ஆசனூரில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் வனப் பகுதியில் இருந்து சனிக்கிழமை வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையில் உலவி வந்தது. பின்னா் சாலையில் சிதறிக்கிடந்த கரும்புகளைத் தின்று சுவைத்தபடி அங்கேயே நின்றுவிட்டது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களில் கரும்பு உள்ளதாக நினைத்து யானை வழிமறித்து நின்றது. சிறிது நேரம் அங்குமிங்கும் சுற்றிவந்த அந்த யானை பின்னா் வனப் பகுதிக்குள் சென்றது.
கடந்த சில நாள்களாக இந்த ஒற்றைக்காட்டு யானை சாலையில் உலவி வருவதும் வாகனங்களைத் துரத்துவதும் தொடா்கதையாகி வருகிறது. எனவே வனத் துறையினா் அந்த ஒற்றைக் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.