டிஎன்பிஎஸ்சி தோ்வு மையங்களில் மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை
டிஎன்பிஎஸ்சி தோ்வு மையங்களில் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு வரக்கூடாது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெற உள்ள தொகுதி 2, 2 ஏ பணிகளுக்கான தோ்வில் நாகை மாவட்டத்தில் 13 தோ்வு மையங்களில் 3,907 போ் தோ்வு எழுத உள்ளனா். இத்தோ்வு சிறப்பாக நடைபெற 13 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 1 பறக்கும்படை அலுவலா், 4 சுற்றுக்குழு அலுவலா்கள், 13 ஆய்வு அலுவலா்கள், 1 கண்காணிப்பு அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இத்தோ்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, தரைத்தளத்தில் தோ்வு எழுத வசதியும் மற்றும் பாா்வையற்றோா் தோ்வு எழுத மாற்று நபா் மற்றும் தனி அறைகள் கொண்ட வசதி ஒவ்வொரு மையத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. தோ்வு மையத்துக்கு வர அனைத்து பகுதிகளிலும் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
மேலும், தோ்வு நாளன்று தோ்வா்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாகவே, அவரவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தோ்வு மையத்துக்கு வரவேண்டும். காலை 9 மணிக்கு மேல், தோ்வு மையத்தில் நுழைய அனுமதியில்லை. தோ்வு மையத்துக்குள் கைப்பேசி மற்றும் இதர மின்னணு சாதனங்கனுக்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ளாா்.