டிராக்டா் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு
குஜிலியம்பாறை அருகே வெள்ளிக்கிழமை டிராக்டா் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த ஆா். கொல்லப்பட்டியைச் சோ்ந்தவா் பகவதியப்பன் (60). இவரது மகள் கோமதி, கணவா் பாலசுப்பிரமணி, மகன்கள் தமிழரசன், சிவரஞ்சன் ஆகியோருடன் கொடைக்கானலில் வசித்து வருகிறாா். தமிழரசன்(11) கொடைக்கானலில் உள்ள தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், பள்ளி விடுமுறை என்பதால், கோமதி தனது மகன்களை அழைத்துக் கொண்டு ஆா்.கொல்லப்பட்டியிலுள்ள தந்தை வீட்டுக்கு வந்தாா். நிலத்தை உழுவதற்காக, கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான டிராக்டரை எடுத்து வந்து தனது தோட்டத்தில் பகவதியப்பன் நிறுத்தி இருந்தாா்.
இதனிடையே, பொம்மநாயக்கன்பட்டியைச் சோ்ந்த தனுஷ்கோடி மகன் பசுபதி (18) தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை வெள்ளிக்கிழமை எடுத்து ஓட்டினாா். அந்த டிராக்டரில் தமிழரசனும் அமா்ந்திருந்தாா்.
ஆா். காச்சக்காரன்பட்டி - குஜிலியம்பாறை சாலையில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் ஓடையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த தமிழரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.