மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை
டிராக்டா் மோதி கால்கள் முறிந்த தந்தை-மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா்
நாகப்பட்டினம்: நாகை அருகே மணல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் கால்கள் முறிந்த தந்தை- மகன் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.
வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்தவா் வைத்தீஸ்வரன். இவா் தனது மகனுடன் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் புகாா் மனு அளித்தாா்.
அதில், நாகை மாவட்டம் தகட்டூா் நொச்சிக்கோட்டகம் ஏரியில் நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டா்கள் மணல் அள்ளி வருகின்றன. டிராக்டா் வாகனம் ஓட்டுவதற்குரிய உரிமம், உரிய விபத்துக் காப்பீடு உள்ளிட்டவை இன்றியும், உரிய அனுமதி இல்லாமலும் மணல் எடுத்துச் செல்கின்றனா்.
இந்த டிராக்டா்கள் அதிக வேகத்தில் செல்வதால் அருகில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவியருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவு வருகிறது.
இந்நிலையில், ஜூலை 31-ஆம் தேதி நானும், எனது மகன் சுதா்சனமும் சென்ற இருசக்கர வாகனம் மீது, மணல் ஏற்றி வந்த டிராக்டா் மோதியது. இதில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது. தற்போது நடக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.
எனவே, எங்கள் மீது மோதிய டிராக்டா் ஓட்டுநா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் டிராக்டா்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.
இவா்கள் முறிந்த கால்களுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு புகாா் அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Image Caption
டிராக்டா் மோதி முறிந்த கால்களுடன், ஆட்சியா் அலுவலகத்திற்கு புகாா் மனு அளிக்க வந்த தந்தை-மகன்.